நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹெச். வசந்தகுமார், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாச் செய்தார். இதனால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ள நிலையில், இந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதியை வசமாக்க ஆளும் அ.தி.மு.க மனோஜ்பாண்டியன் தலைமையில் மூவர் கண்காணிப்புக்குழுவை அமைத்திருக்கிறது. அவர்களும் தொகுதியின் கிளைக் கழகச் செயலாளர்களை உத்வேகப்படுத்தியிருக்கிறார்கள். அதேசமயம் நிழல் உலகை விட்டு அரசியலுக்கு வந்த ராக்கெட் ராஜா, தொகுதியில் நாடார் சமூகத்தினர் மெஜாரிட்டி காரணமாக தனது பனங்காட்டுப்படை கட்சி சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் 1991ன் போது அங்கே போட்டியிட்ட தி.மு.க.வின் தொகுதிவாசியான ஆச்சியூர் மணி எம்.எல்.ஏ.வானார். அதன் பின் 28 வருடங்களாக நேரடியாகக் களமிறங்காத தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிக்கே ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. இதையடுத்து தற்போது தி.மு.க மாவட்ட செயலாளர்களும் படுவேகமாக செயல் வீரர்கள் கூட்டத்தினை நடத்தி வருகின்றனர். இதனால் நாங்குநேரி தேர்தல் களம் உஷ்ணமாகத் தொடங்கிய நிலையில், கடந்த 6ம் தேதியன்று மாநில காங்கிரசின் தலைவர் கே.எஸ். அழகிரியின் தலைமையில் அங்கே தேர்தல் பற்றிய ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதற்கான காரணம் கூட்டணியான அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதே அடிப்படை என்று கூறப்படுகிறது.
அப்போது கூட்டத்தில் கட்சித் தொண்டர்களின் ஆதங்கங்கள் வெடித்தன. இந்த தொகுதியைச் சார்ந்த வேட்பாளரே நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர். கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை சொன்னதால், அதன்படி செய்யப்படும் என்றார் தலைவர் அழகிரி.
இதனிடையே கிழக்கு மாவட்ட காங்கிரசின் தலைவர் சிவக்குமாரின் தலைமையிலான கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற தீவிரமாகப் பாடுபடவேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கண்டு அதிர்ந்து போன மாநில காங்கிரஸ் தலைமை, மாவட்டக் காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் அரசியல் கட்சிகள் முற்றுகையிட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதியில் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது.