100 நாள் வேலை திட்டம் நிதியை பிற பணிகளுக்கு மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அரசாணையை வாபஸ் பெற கேட்டு பெண் தொழிலாளர்கள் கலெக்டா் அலுவலகத்தை மனுக்களோடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏழை மக்களின் பட்டினியை போக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் உருவாக்கிய 100 நாள் வேலைதிட்டத்தை அரசு முடக்க பார்க்கிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 600 கோடியை பிற வேலைகளுக்கு மாற்றம் செய்ய எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 110 அரசாணையை வாபஸ் வாங்க வேண்டும்.
100 நாள் என்ற வேலையை 150 நாளாக வழங்க வேண்டும். மேலும் நீா்நிலைகள் பராமாரிப்பு குளங்கள், குட்டைகள், நீரோடைகள் தூா்வாருவது மற்றும் புது மண் சாலைகள் அமைப்பதில் 100 நாள் தொழிலாளா்களை பயன்படுத்த கேட்டு அகில இந்தியா விவசாய தொழிலாளா்கள் சங்கம் சார்பில் 500 க்கு மேற்ப்பட்ட பெண்கள் நேற்று கொட்டும் மழையில் கையில் மனுக்களோடு நாகா்கோவில் கலெக்டா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் கலெக்டா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் தொழிலாளா்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.