கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் சாலையில் நேற்று (24.11.2024) தமிழக போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அவ்வழியாக வந்த ஒருவரைச் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 10 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரிக்கு உட்பட்ட மடுகரையில் உள்ள சாராயக்கடையில் இருந்து இந்த சாராய பாக்கெட்டுகளை வாங்கி வருவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மடுகரையில் அமைக்கப்பட்டுள்ள சாராயக்கடைக்கு தமிழக போலீசார் சென்றனர். அப்போது அங்கிருந்த சாராய விற்பனையாளர்கள், ‘தமிழக போலீசார் இங்கு வந்து சோதனை நடத்த அனுமதிக்க மாட்டோம்’ எனக் கூறினர். அதோடு இந்த ஆய்வுக்குச் சென்ற உதவி ஆய்வாளரையும் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக போலீசார் இரு டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீசார் மடுகரைக்கு சென்றனர். அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுகரை போலீசார் தமிழக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதாவது, “எங்களுக்குத் தெரியாமல் நீங்கள் எப்படி இங்கு வந்து சோதனை செய்யலாம். இந்த சாராய கடையில் ஏதாவது பிரச்சனை என்றால் எங்களுக்கோ, புதுச்சேரி கலால் துறைக்கோ தான் தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக போலீசார் நேரடியாக வந்து சோதனை செய்யக் கூடாது” எனத் தமிழக போலீசாரிடம் புதுச்சேரி போலீசார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்த 100 சாராய பாக்கெட்டுகளை தமிழக பறிமுதல் செய்து எடுத்து வந்துள்ளனர்.