மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, குற்றப் பின்னணி கொண்ட ஒரு பெண் கொடுத்த பாலியல் புகார் தேசமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/i69p3N-1HpkPPFbDdC7Bqr1MxSDC8Nepga2TMGTj50Q/1555834909/sites/default/files/inline-images/Ansari.jpg)
குற்றம் சாட்டியுள்ள பெண்மணியின் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியை குறிவைத்து , அந்த பெண்ணின் பின்னால் இருந்து இயக்கும் ஆபத்தான சக்தி குறித்து கேள்விகள் எழுத் தொடங்கியதில் ஆச்சர்யமில்லை.
அனைத்து தரப்பாலும் நேர்மையானவராகவும், கண்ணியமானவராகவும் மதிக்கப்பட்டு வந்த ஒரு நீதிபதியின் மீது, அவர் முக்கிய சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருப்பது " திரைமறைவு தீய சக்திகள்" குறித்த ஐயங்களை வலிமையூட்டுகிறது.
20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தனக்கு வங்கி கணக்கில் ரூ 6.80 லட்சம் ரூபாய் தான் உள்ளது என்றும், இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் நல்லவர்கள் இது போன்ற பதவிகளுக்கு வருவது அரிதாகி விடும் என்றும், 20 ஆண்டுகால தன்னலமற்ற தனது சேவைக்கு கிடைத்த வெகுமதி இதுதான் என்றும் அவர் குமுறியிருக்கிறார்.
இப்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார். அவரது வார்த்தைகள் தூய இதயத்தின் அடிவாரத்திலிருந்து தெறித்து விழுந்தவை என்பதை உணர முடிகிறது.
நரேந்திர மோடி பிரதமராக வந்த நாள் முதலே உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு துறை, மத்திய அமலாக்க துறை ஆகியவற்றின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வலிமைப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குமுறல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவே மோடியின் ஆதரவாளர் என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்ட, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வுக்கு எதிராக போர்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பதும், நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டிய அந்த 4 நீதிபதிகளிலும் இவரும் ஒருவர் என்பதும் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
குற்றஞ்சாட்டிய பெண்ணின் புகார் குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் " தலைமை நீதிபதி மீது அடிப்படையற்ற , ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக " கூறியுள்ளனர்.
அது போல் அட்வகேட் ஜெனரல் K.K வேணு கோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆகியோரும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவும் ஒரே குரலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பக்கம் உண்மை இருப்பதாக தெரிவித்து, அவருக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள்
வெறுப்பு , காழ்ப்புணர்ச்சி, பழி வாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், நேர்மையானவர்கள் மீது தனி மனித அவமானங்களை ஏற்படுத்தி, அவர்களை தரம் இறக்கி, தகுதி இழக்க செய்வது என்பது ஜனநாயக விரோதப் போக்காகும்.
உச்ச நீதிமன்ற தலைமைத்துவ மாண்பிற்கே, அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திரைமறைவு தீய சக்திகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையேல் நாசகர சக்திகள் நம் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இவ்விஷயத்தில் அநியாயமாக நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக பொதுமக்களும், ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டுமென மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
’’