ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார். இந்நிலையில் ரோஜா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.