தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் உள்ள ரசிகர்கள் சற்று வித்தியாசமாக, வெயில் மழை என்று பாராமல் மக்கள் தேவைக்காக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு 220 ரூபாய்க்கு பெட்ரோல், அவர்கள் பசி போக்கும் வகையில் அவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்கள்.
இதனையடுத்து, நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. அந்த போஸ்டர்களில், ‘மாணவ மாணவிகள் மத்தியில் நட்பான பார்வை (13 மணி நேரம்) நிதான பேச்சு (அரசியல்) ஓட்டாக மாறி போச்சு’ - ‘55 ஆண்டுக் காலமாக திராவிட ஆட்சிகள் மாறினாலும், மக்கள் துயரப்படும் காட்சிகள் மட்டும் மாறவில்லை’ - ‘தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி, உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.