நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்த செய்தியை தொலைக்காட்சி மூலமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிந்துள்ளார்.
சூர்யாவின் கடிதத்தில், ‘உயிருக்குப் பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ள பகுதி, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக, அவரது கருத்துக்குப் புலப்பட்டுள்ளதாகக் கூறி, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி-க்கு நேற்று (13/09/2020) இரவு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், " 'உயிருக்குப் பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுதச் சொல்வதாகச் சொல்லியிருக்கும்' சூர்யாவின் கருத்து, நீதிபதிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது." மேலும், சூர்யாவின் கருத்து, "நீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. சூர்யாவின் இந்தக் கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.