ஈரோட்டில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "நாம் செய்கிற எந்தவொரு பொதுநல செயல்களும்,லாபகரமானது அல்ல. என்னுடைய ஒத்த செருப்பு படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை.
பிரிவினை இல்லாத இந்தியா என்பதே மக்களின் விருப்பம் என்னுடைய ஆசையும் கூட அதுதான். போராடும் மாணவர்களின் குரல்வளையை அரசுகள் நெரிக்க கூடாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது எதிர்ப்பு அதிகமாக இருந்தது. இப்போது சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் அரசியலுக்கு வரும் நடிகர்கள் மீது எதிர்ப்பு குறைவாக உள்ளதுபோல் தோன்றுகிறது. சினிமா ஒரு வர்த்தகம் தான்.
அந்த வியாபாரம் ஒரே மாதிரியாக இருந்தாலும் இப்போது ஆன்லைன் வருமானம் உள்ளது. திரையரங்குகள் என்றும் குறையாது. சினிமாவிலிருந்து பலர் அரசியலுக்கு வருவது இருக்கட்டும். இப்போது நிலைமை என்ன, அரசியலில் உள்ள நிறையபேர் சினிமாதுறையினை ஆக்கிரமித்து உள்ளனர்" என்றார்.