ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த முசிறி பகுதியில் சன்பிக்ஸ் என்ற தனியார் கெமிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு ரசாயனங்கள் மற்றும் ஆசிட் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆசிட்களை தேக்கி வைக்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை தோல் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிக்க பயன்படும் பாலி அலுமினியம் குளோரைடு ஆசிட் தேக்கி வைக்கப்பட்டிருந்த ராட்சத டேங்க் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக ஆசிட் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக உருவாகும் புகையால் அப்பகுதியில் புகைமூட்டமாகக் காணப்பட்டது. டேங்க் உடைந்து வெளியான ஆசிட் தாக்கம் குறைவான கெமிக்கல் என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் பணியாற்றிய 7க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் எரிச்சல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட சிறு பாதிப்போடு பணியாற்றியவர்கள் உயிர் தப்பினர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் 10 பேர் அடங்கிய குழுவினர் சுவாசக் கருவிகளைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் எம்-சாண்டை கொட்டியும் ஆசிட் வீரியத்தை மற்றும் வெளியாகும் புகையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலை அருகே குடியிருப்பு பகுதி இல்லாததால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அருகில் கல்குவாரி மற்றும் கிரஸ்சர்கள் செயல்பட்டு வருவதால் அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.