பெங்களூரில் நடைபெற்ற விமான கண்காட்சி மற்றும் ட்ரோன் ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் அஜித் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் மாணவர்கள் குழுவான ''தக்க்ஷா'' குழு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ''தக்க்ஷா'' என்ற குழுவாக இணைந்து ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவை தொழில்நுட்ப முறையில் தயாரித்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற ''ஏரோ இந்தியா 2019'' விமானம் மற்றும் ட்ரோன் ஒலிம்பிக் என்ற பெயரில் முதல் முறையாக நடந்த போட்டியில் தக்க்ஷா வெற்றிபெற்றது. போட்டியில் மாணவர் குழு தயாரித்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு செயல்முறை காட்டப்பட்டன.
ஐந்து பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டன. இதில் 4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்புப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து 1.5 லட்சம் பரிசுத் தொகையை கைப்பற்றியது. மேலும் 4 முதல் 20 கிலோ எடையிலான கண்காணிப்புப் பிரிவில் முதலிடத்தை பிடித்து மூன்று லட்சத்தை தட்டி சென்றது. பறக்கும் தொழில்நுட்ப சவால் பிரிவில் இரண்டாம் இடத்தை தக்கவைத்து 3 லட்சம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இப்படி மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளது.
ஹைபிரிட் கண்காணிப்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி வெற்றி வாகை சூடிய தக்க்ஷா குழுவினருக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் நாடுகள் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன