விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடுகிறது. பாமகவின் வேட்பாளராக அன்புமணியை நிறுத்தியிருக்கிறார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி. வேட்பாளராக அறிவுக்கப்பட்டுள்ள அன்புமணி, ஏற்கெனவே 2016-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டவர்.
2016-இல் தனித்து பாமக களம் கண்ட போது போட்டியிட்ட அன்புமணி, சுமார் 41,428 வாக்குகளைப் பெற்றார். பதிவான வாக்குகளில் இது 23.19 சதவீதமாகும். அந்த அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. இடைத் தேர்தல்களில் பாமக போட்டியிடுவதில்லை என்பதும், ஒரு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டால் அந்தச் சமயத்தில் அந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றிப் பெற்றதோ அந்தக் கட்சிக்கே வாய்ப்பு தருவதற்கேற்ப தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்பதும் பாமகவில் எடுக்கப்பட்ட முடிவு. அதுவே பாமகவின் கொள்கையாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், தனது கொள்கையை கைவிட்டுவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை பாமக தலைமை எடுத்துள்ளது. இந்த முடிவு பாமகவிலேயே சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய பாமகவினர், “நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாமக ஜெயிக்கவில்லை. தர்மபுரியில் நிச்சயம் வெற்றி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் தோல்வியைத் தழுவியது பாமக. வட தமிழகத்தில் பாமகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதையும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பார்கெய்ன் பவரை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. மற்றபடி கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒரே கட்சி பாமக தான்” என்கிறார்கள்.