Skip to main content

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 80 தமிழக மீனவர்கள் தாயகம் வந்தனர்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 80 தமிழக மீனவர்கள் தாயகம் வந்தனர்

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறையில் அடைக்கின்றனர். அவ்வகையில், கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 80 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறைகளில் அடைத்தனர். இதேபோல 160-க்கும் மேற்பட்ட படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 43 படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன.

மீதம் உள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மத்திய அரசும் இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வந்தது.இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு சென்ற நிலையில், நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது.

அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி மீனவர்கள் 80 பேரையும் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நேற்று இரவு தாயகம் வந்தனர். காரைக்கால் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த அவர்களை, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்  அழைத்துச் சென்றனர்.

சார்ந்த செய்திகள்