நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்த தகவலின் படி, “தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 511 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 39 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையெனில் பூத் சிலிப் வழங்கப்படமாட்டாது. இதுவரை 13 லட்சம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.