திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூபாய் 72 லட்சத்தி 79 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவுப்படி வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து ஹரியானா, ஒரிசா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரியவந்தது. கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளை நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஆரிஃப், ஆசாத், குதரத் பாஷா, அப்சர் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்ச ரூபாய் பணத்தையும், இரண்டு கார்களையும் கைப்பற்றிய நிலையில், நேற்று இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிராஜுதின் என்பவரை கர்நாடகா மாநில எல்லை அருகே தனிப்படை போலீசார் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஏடிஎம் கொள்ளையில் முக்கியக் குற்றவாளியான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்ற நபரை திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.