![75 pawn gold sized by police near viluppuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/44D3oXJ_pF1xMVt6QmyFMVdYMZ-uW0u-Vcf3murFJes/1644390101/sites/default/files/inline-images/th_1722.jpg)
விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம், ஆகிய நகராட்சிகளுக்கும் வளவனூர், செஞ்சி, அனந்தபுரம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி, மரக்காணம், பேரூராட்சிக்கும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்கவும் மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பறக்கும் படைகள் தினசரி 3 ஷிப்டு முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வட்டாட்சியர் தலைமையில், சிறப்பு எஸ்.ஐ. மற்றும் போலீசார் குழுவாக இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பாலம் அருகே பறக்கும் படை தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ. சின்னப்பன் மற்றும் போலீசார் பரமசிவம், ஷோபா ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி அவரிடம் சோதனை நடத்தினர். அவரிடம் இருந்து தங்கத்தினால் செய்யப்பட்ட ஏராளமான ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணநகைகள் இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது குமாரன் என்பது தெரியவந்தது. மேலும், அவர் கொண்டுவந்த அந்நகைகளுக்கான ஆவணங்களும் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.
அதனால், அவரிடம் இருந்து அந்நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், நகராட்சி தேர்தல் அதிகாரியான சுரேந்திர ஷாவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஆபரணங்களில் ஜிமிக்கி கம்மல் 42, சிறிய கம்மல் எட்டு ஜோடி, தாலி சரடில் கோர்க்கப்படும் உருப்படிகள் 598 என மொத்தம் 75 சவரன் இருந்தது. இதன் மதிப்பு 27 லட்சம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அந்த ஆபரணங்களை விழுப்புரத்தில் உள்ள அரசு கருவூலத்தில் அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேற்படி தங்க நகை ஆபரணங்கள் வியாபாரத்திற்காக நகை கடைக்கு கொண்டுசெல்லப்பட்டதா? வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.