‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்கிற பரப்புரை பயணத்தை, தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளனர். தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி என வரிசையாக மக்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி திருவண்ணாமலை நகரில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
முதல்கட்டமாக, திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில், திருவண்ணாமலை நகரத்தில் உள்ள 'பூ' வியாபாரிகளின் மார்க்கெட் பகுதிக்கே சென்று கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது, பூ வியாபாரிகள், மாதம் 700 ரூபாய் என இருந்த மாத வாடகையை 7,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது நகராட்சி, போதிய வசதிகள் இல்லை எனக் கூறினர். அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகர்களுடன் கலந்துரையாடல், விவசாயிகளுடன் கலந்துரையாடல் எனப் பல்வேறு உள்ளரங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சம்மந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, “பூ வியாபாரிகளுடன் உரையாடினேன், அவர்கள் தங்களது குறைகளைக் குறிப்பிட்டார்கள். அதேபோல் வர்த்தகர்களுடன் உரையாடினேன், அவர்களும் தங்களது குறைகள், கோரிக்கைகளைக் கூறியுள்ளார்கள். வர்த்தகர்களுக்கான வாரியம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்கள். அதனைத் தலைவர் ஸ்டாலின், கவனத்துக்குக் கொண்டு சென்று வாரியம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி தந்துள்ளேன்.
ஜி.எஸ்.டி வரியில் உள்ள குளறுபடிகளை எடுத்துச் சொன்னார்கள், அதனையும் கவனத்தில் கொள்வோம், பொதுப் பிரச்சனைகளான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குறைகள் சரி செய்ய வேண்டும். பாதாளசாக்கடை திட்டம் பிரச்சனை போன்றவற்றையும் குறிப்பிட்டார்கள். அனைத்தும் சரிசெய்யப்படும்” என்றார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் கட்சித் தொடங்க அனைவருக்கும் உரிமையுள்ளது. அதேபோல் ரஜினிக்கும் உரிமையுள்ளது, அவர் முதலில் கட்சித் தொடங்கட்டும் அதன்பின் அதுபற்றி பேசுவோம் என்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல், விசாரணை நடத்தக்கூடாது எனக் கருத்துத் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அவருக்கான கருத்தை அவர் தெரிவித்துள்ளார் என்றார்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்