திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழக அரசின் அறநிலையத் துறைச் சார்பில் 'அனைத்துலக முருகன் மாநாடு' இரண்டு நாட்கள்(24.8.2024 - 25.8.2024) நடைபெற்றது. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மாநாடு நடைபெற்றாலும் மாநாட்டின் அரங்கு மற்றும் கண்காட்சிகளைப் பொதுமக்கள் ஒரு வார காலம் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
நடைபெற்ற அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் உள்ள அருணகிரிநாதர் அரங்கில் நடுவில் ராஜ அலங்காரத்தில் முருகன் எழுந்து நிற்பார். அதன் இரண்டு பக்கமும் வேலுடன் மயிலும் சேவலும் இருக்கும். அந்த அரங்கில் தான் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, சென்னையைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவியான தியா முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொண்டு முருகனைப் பற்றிப் புகழ்ந்து பாடி இருக்கிறார். சிறுமி தியா மூன்று வயதில் வீட்டில் பாடி பாடி பாடலை கற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 54 கச்சேரிகளில் கலந்துகொண்டு முருகனைப் பற்றி பாடியிருக்கிறார். தியா முருகனின் தீவிர பக்தர். அதோடு திருப்புகழ் கந்தர் அலங்காரம் பேசி விளக்கம் சொல்லிப் பாடல்கள் பாடக்கூடியவராகவும் சிறுமி தியா இருந்து வருகிறார்.