பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு சொகுசு விரைவுப் பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டுச் சாலை தரைப்பாலம் மீது வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் சென்று சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது
இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேருந்து விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்த 64 பேரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியில் ஒரு பெண் உட்பட மூவர் பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நதீம், வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்த முகமது பைரோஸ், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித், சென்னை பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (35) என ஒரு பெண் மற்றும் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 27 பேரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் குறுகலான தரைப்பாலம் இருப்பதால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தினை சரி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.