சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள முத்தூரணி பகுதியில் ஏ.கே. நிதி நிறுவனம் என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் அன்பழகன். இவர் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி அப்பகுதி முழுவதும் விளம்பரம் செய்துள்ளார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சேக் மதார். 65 வயதான இவர் இந்த நிதி நிறுவனம் பற்றி தகவல் அறிந்துள்ளார். இதையடுத்து நேராக அந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட நிதி நிறுவனம் முதலில் பிராசஸிங் பீஸ் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 10 நாட்களில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளனர். அப்போது அவரிடம் பேசிக்கொண்டே அறையில் இருந்த பணக்கட்டுகளையும் காட்டியுள்ளனர். பின்னர் இதை உண்மை என நம்பிய சேக் மதார் அவர்கள் கேட்டபடியே 10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதனிடையே சில நாட்கள் கழித்து அந்த பைனான்ஸ் நிறுவனம் கூடுதலாக 5 லட்சம் கொடுத்தால் நீங்கள் கேட்ட தொகை கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த சேக் மதார், காரைக்குடி ஏ.எஸ்.பி ஸ்டாலினிடம் ரகசியமாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்டு அன்பழகன் வீட்டில் சோதனை நடத்த காரைக்குடி வடக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அன்பழகன் வீட்டுக்குள் திடீரென நுழைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அவருடைய வீட்டுக்குள் கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவற்றை ஆய்வு செய்தபோது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்பழகன் மற்றும் நிதி நிறுவன மேலாளர் ஆசிக் இப்ராஹிம் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம், கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏராளமானோர் புகார் அளித்து வருகின்றனர். தற்போது இச்சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.