
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்டது தொடர்பாக, சேலம், ஈரோடு மருத்துவமனைகளில் காவல்துறை விசாரணை தொடங்கியிருக்கிறது. வெளிமாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கருமுட்டை விற்பனை தொடர்பாக, சிறப்பு மருத்துவர்கள் குழு சிறுமியிடம் விசாரணை நடத்தியது. அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிறப்புக் குழுவினர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
மருத்துவமனைகளில் இருந்து சில ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகள் நகல் எடுத்தனர். அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகனிடம் சிறப்பு மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். மேலும், சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் கருமுட்டை விற்பனையில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெளிமாநிலங்களில் உள்ள அந்த மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்த சிறப்புக் குழு திட்டமிட்டுள்ளது. ஈரோட்டில் விசாரணையை நிறைவு செய்த குழுவினர், சேலத்தில் உள்ள மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.