பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன், கே.என்.நேரு, மூர்த்தி, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினர்.
இந்த நிலையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க,ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.