திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சியின் அனைத்து அணி செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.