மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இதனையேற்று பல்கலை. செனட் மற்றும் சிண்டிகேட் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், ஆளுநரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், மதுரை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு திமுக கொடியுடன் கார் வந்தபோது போலீசார், அந்தக் காரை நிறுத்தி அதில் இருக்கும் கொடியை அகற்றிய பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டது.