பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்கவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட ராஜாவுக்கு எதிராக குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர் சத்தியராஜ் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தனித்தனியாக எஸ்பிளனேடு மற்றும் உயர் நீதிமன்ற காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இந்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாததால், அவற்றின் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த புகார்கள் குறித்து விசாரிக்கும்படியும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படியும் உத்தரவிட்டார்.