கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவரது பூட்டப்பட்டிருந்த வீட்டில் கடந்த மே மாதம் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி புதுச்சேரி மாநிலம் சொறையபட்டு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது கார்மேகம், 25 வயது சுந்தரவடிவேல், வானூர் அடுத்துள்ள நெமிலி என்ற கிராமத்தை சேர்ந்த 26 வயது தினகரன், கொள்ளை நடந்த கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது தஷ்ணாமூர்த்தி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையையும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கொள்ளை வழக்கை திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி கொள்ளையர்களை குறுகிய காலத்தில் கைது செய்துள்ளது குறித்து காவல்துறையினருக்கு அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.