தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெவ்வேறு இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நொனங்கனூர் பகுதியில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் ஒரு நாட்டுத்துப்பாக்கி கேட்பாரற்றுக் கிடந்தது. அவற்றைக் கைப்பற்றிய காவல்துறையினர், சுற்று வட்டார கிராமங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேபோல தொப்பூர் காவல் நிலைய எஸ்.ஐ. மாதேஷ் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றபோதும் பாளையம்புதூர் கோம்பை பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியைக் கைப்பற்றினர்.
அரூர் காவல்துறையினர் இலந்தக்கோட்டப்பட்டி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு காவல் நிலைய சரகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மூன்று நாட்டுத்துப்பாக்கிகள் ஒரே நாளில் கைப்பற்றப்பட்டுள்ளன. உரிமம் இல்லாத துப்பாக்கிகளை அவர்களாகவே காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒப்படைப்போர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்போர், காவல்துறைக்குப் பயந்து சாலையோரங்களிலும், கோயில் திடல் போன்ற பொது இடங்களிலும் வீசிவிட்டுச் செல்வதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இதுபோல அனாமதேயமாக துப்பாக்கியை வீசிவிட்டுச் செல்வோர் குறித்தும் விசாரித்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.