
கனிஷ்க் நகை நிறுவனத்துக்குச் சொந்தமான 138 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இத்துடன் சேர்த்து கனிஷ்க் நிறுவனத்தின் 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கனிஷ்க் நகை நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான சென்னையைச் சேர்ந்த பூபேஷ்குமார், போலி ஆவணங்கள் மூலம் 14 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில், 824 கோடி ரூபாய் கடன் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், கனிஷ்க் நிறுவனம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூபேஷ்குமார், அவரது மனைவி நீட்டா ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
வங்கிக்கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கில் பூபேஷ் குமார் கடந்த மே 25 -ல் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, கனிஷ்க் நகை நிறுவனத்தின் 138 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர்.
ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள கனிஷ்க் நிறுவனத்தின் சொத்துக்களையும் சேர்த்து இன்று முடக்கப்பட்டுள்ள 138 கோடி கனிஷ்க் நிறுவனத்தின் சொத்துக்களையும் சேர்த்து இதுவரை 281 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.