
மதுரை காமராஜர் புரத்தில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது தொழில் விருத்திக்காக வட்டி கொடுத்து வரும் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சித்திரைஅழகு, லட்சுமி ஆகிய இருவரிடமும் ரூபாய் 50,000 பெற்றுள்ளார். 50,000 பெற்றுக்கொண்டு வட்டியுடன் மொத்த பணத்தையும் கட்டி விட்டார். இருப்பினும் கூட லட்சுமி மற்றும் சித்திரை அழகு ஆகிய இருவரும் '50 ஆயிரத்திற்கு உரிய வட்டி நீ தரவில்லை எங்களுக்கு இந்த வட்டி போதாது கூடுதலாக வட்டி தர வேண்டும்' என பலமுறை அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இருப்பினும் 'நான் ஐம்பதாயிரம் மற்றும் வட்டி கட்டிவிட்டேன் திரும்பவும் தாங்கள் வட்டி கேட்பது எந்த விதத்தில் நியாயம்' என கீதா கேட்டுள்ளார். உடனடியாக மோகன்ராஜ் என்பவரின் துணையோடு கீதாவை தாக்க முற்பட்டுள்ளனர். உடனடியாக அதிர்ந்துபோன கீதா மதுரை கீரைத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து கந்துவட்டி தொழிலில் ஈடுபட்ட லட்சுமி மற்றும் சித்திரை அழகு அடியாளாக வந்த மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
கந்துவட்டி என்பது தடை செய்யப்பட்ட சூழ்நிலையிலும் கூட மதுரை மாவட்டம் முழுவதும் இதுபோன்ற வட்டிக்காரர்கள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. பூ வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளை குறிவைத்து கந்துவட்டி நபர்கள் வட்டிக்கு கொடுத்து பின்பு அவர்கள் வட்டிக்கு வட்டி கொடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். உடனடியாக மாநகர காவல் துறையினர் இதுபோன்ற குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.