மதுரை மத்திய சிறையிலிருந்து பேராசிரியை நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் அழைத்துவரப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்கள் மீது பதிவாகியிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லையென்று, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி, இம்மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். சிபிசிஐடி போலீசாரும் எதிர்மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, குற்றப்பத்திரிக்கையில் தங்களின் கட்சிக்காரர்களுக்கு உள்ள சாதகமான அம்சங்களை குறிப்பிட்டனர். அரசுத்தரப்பு வழக்கறிஞர் எதிர்வாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அரசுத்தரப்பு வாதத்திற்கு வரும் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படியும் மூவரையும் அன்றைய தினம் மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார் நீதிபதி லியாகத் அலி.
‘சுப்ரீம் கோர்ட்டிலாவது எங்களுக்குத் தீர்வு கிடைக்காதா?? எங்களை எப்போதுதான் வெளியில் கொண்டுவரப் போகின்றீர்கள்?’ என, தங்களின் வழக்கறிஞர்களிடம் வழக்கம்போல் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்கள், இறுக்கமான முகங்களுடன் அந்நீதிமன்றத்திலிருந்து காவலர்களால் மதுரைமத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.