கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் சின்னப்பா, மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ஆதிமூலம், கற்பனைச் செல்வம், அண்ணாதுரை, முத்தமிழ், கிருஷ்ணமூர்த்தி, ஞானசபாபதி, மணி, ரங்கசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க புவனகிரி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 24 சர்க்கரை ஆலைகளின் சங்க நிர்வாகிகள் 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொது செயலாளர் ரவீந்திரன், தமிழகத்தில் தனியார், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் என 11 ஆலைகளும், பொதுத்துறை நிறுவனத்தை சேர்ந்த 10 சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 450 கோடி பாக்கி வைத்துள்ளது. ஒரு விவசாயி அறுவடை செய்யப்பட்ட கரும்பை சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய 14 நாட்களில், அவருக்கு கரும்பு கட்டுப்பாடு நிர்ணய விலையை சட்டப்படி வழங்க வேண்டும்.
ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்க சர்க்கரை ஆலைகள் வழங்க மறுக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். அந்த போராட்டத்தின் போது அரசு சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஆகஸ்ட் இறுதிக்குள் நிலுவை தொகையை கொடுத்து விடுகிறோம் என்று தமிழக அரசு சார்பில் தொழில் துறை அமைச்சர் சம்பத் கலந்து கொண்டு உறுதி அளித்தார். ஆனால் இது வரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
விவசாயிகள் பழைய கடனை கட்டாததால் வங்கியில் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். அதன் காரணமாக விவசாயிகள் கந்துவட்டி, நுண்கடன், தனியாரிடம் மறுபயிர் வைக்க கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள சர்க்கரை ஆலைகளின் முன்பு வரும் 10-ந்தேதி முதல் கரும்பு விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம் நடத்தப்படும்.
பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை, திருமான்குடி ஆரூறான் சக்கரை ஆலை விவசாயிகளின் பெயரில் ரூ. 600 கோடி வங்கியில் கடன் வாங்கியுள்ளது. இதுகுறித்து பெண்ணாடம் ஆலை மீது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதேபோல் வெள்ளிக்கிழமையன்று தஞ்சை மாவட்டம் திருமாண்குடி ஆரூறான் சர்க்கரை ஆலை மீதும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற தொடர் போராட்டத்தின் விளைவாக நடந்துள்ளது. செப்டம்பர் 10- ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கரும்பு ஆலைகள் வழங்கும் வரை தொடரும் என்றார்.