Skip to main content

'டிடிவி தினகரன் புரட்சித்தலைவரா?''; எம்ஜிஆர் விசுவாசிகள் அப்செட்! 

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

 

cut out


சேலத்திற்கு வந்திருந்த டிடிவி தினகரனை வரவேற்று சாலையெங்கும் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு வரவேற்பு வாசகங்கள் இருந்ததைக் கண்டு தீவிர எம்ஜிஆர் விசுவாசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


சேலத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா மற்றும் கட்சிக் கொடியேற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் இன்று சேலம் (ஜூலை 7, 2018) வந்திருந்தார். குரங்குசாவடி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அவர் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 


வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அமமுக தலைமைக் கழக செயலாளருமான எஸ்.கே.செல்வம் வசிக்கும் பூலாவரி அருகே உள்ள ஒரு மண்டபத்தில், திருமண விழா நடந்தது. இதனால் ஹோட்டல் அருகிலும், பிறகு கொண்டலாம்பட்டியில் இருந்து எஸ்.கே. செல்வம் வீடு வரையிலும் டிடிவி தினகரனை வரவேற்று பிரம்மாண்ட கட்&அவுட்டுகள், கட்சிக் கொடிகள், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன.

 

sut out

 

கட்-அவுட் என்ற பெயரில் பணத்தை தண்ணீராய் இறைப்பது என்பது அதிமுகவில் தொன்றுதொட்டு இருந்து வரும் வாடிக்கைதான். ஆடம்பரத்தை விரும்பும் ஜெயலலிதாவேகூட கடந்த 2016ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கட்-அவுட் கலாச்சாரத்தை பெரும்பாலும் தவிர்க்கும்படி சொன்னார். 


ஆனால் இன்று அதிமுகவினரையே மிஞ்சும் அளவுக்கு அ.ம.மு.க.வினர் கட்-அவுட் வைத்துள்ளனர். கட்-அவுட் வைத்ததுகூட பெரும் பிரச்னையாக யாரும் கருதவில்லை. ஆனால், தினகரனை வரவேற்று அவற்றில் அச்சிடப்பட்டு இருந்த வாசகங்கள்தான் தீவிர எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளை ரொம்பவே அதிருப்தி அடையச் செய்துள்ளது.


'மக்கள் செல்வரே', 'நாளைய முதல்வரே', 'நாயகரே', 'தமிழகத்தின் விடிவெள்ளியே' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இதுபோன்ற வாசகங்களை கிட்டத்தட்ட எல்லா கட்சித் தொண்டர்களுமே ஆர்வ மிகுதியால் தங்கள் அபிமானத்திற்குரிய தலைவருக்கு போட்டுக் கொள்வதுதான் என்றாலும், சில இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட்களில் 'புரட்சித்தலைவரே' என்றும், 'மக்களின் முதல்வரே' என்றும் அச்சிடப்பட்டு இருந்த வாசகங்களைத்தான் தங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர் எம்ஜிஆர் விசுவாசிகள்.

 

cut

 

'சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றிருந்தபோது மீண்டும் ஓ.பி.எஸ். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் ஜெயலலிதாவுக்கு, 'மக்கள் முதல்வர்' என்று தொண்டர்கள் பட்டம் கொடுத்தனர். பொதுவெளியிலும் மக்களின் முதல்வர் என்றால் அவர் ஜெயலலிதாதான் என்று புரிந்தும் கொண்டனர்.


அதேபோல் சினிமாலும், அரசியல் வாழ்விலும் எதிர் நீச்சல் அடித்துப் பழக்கப்பட்டவர் எம்ஜிஆர். அதனால்தான் அவரை நாங்கள் புரட்சித்தலைவர் என்கிறோம். இதுபோன்ற எந்த தகுதிகளும் இல்லாத டிடிவி தினகரனுக்குக்கூட இன்று புரட்சித்தலைவர், மக்களின் முதல்வர் என்றெல்லாம் பட்டம் சூட்டியிருக்கின்றனர். அதுவும், ஜெயலலிதாவால் எம்எல்ஏ ஆன எஸ்.கே.செல்வம் போன்றவர்கள்கூட இதுபோன்ற கட்-அவுட் வாசகங்களுக்கு எப்படி அனுமதி அளித்தனர் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது,'' என்றனர் ஜெயலலிதா, எம்ஜிஆரின் தீவிர தொண்டர்கள்.


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் நோட்டைக் கொடுத்துதான் டிடிவி தினகரன் வெற்றதாக சொல்கின்றனர். அவருடைய கட்சியினர் அதைத்தான் புரட்சி என்கிறார்களோ என்னவோ என்றும் கிண்டலாக கூறினர். அவருடைய கட்சிக்கு இன்னும் சின்னம்கூட உறுதி செய்யப்படாத நிலையில், அதற்குள் மக்களின் முதல்வர் என்று தமக்குத்தாமே பட்டம் சூட்டிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது என்றும் எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகள் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்