
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அந்தந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை செய்து அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் வரபாளையம், வெள்ளோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடுமுடி, ஈரோடு தாலுகா, டவுன், வெள்ளித்திருப்பூர், அரச்சலூர், திங்களூர், ஆசனூர், ஆப்பக்கூடல் கோபி, அந்தியூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி மது விற்றதாக ஒரே நாளில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 221 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.