![21kg of cannabis, Rs 20 lakh cash seized](http://image.nakkheeran.in/cdn/farfuture/9Dq4uY8-yzdGCiMD7d3aDEjKXHJ0X5SLMFDRm0k2lo8/1589894731/sites/default/files/inline-images/IMG-20200519-WA0005.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வருபவர் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் கடந்த பல ஆண்டுகளாக கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். கள்ளச்சாராய வழக்கில் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் அடைக்கப்பட்டவர். அவருக்கு பக்கபலமாக பல பெரிய மனிதர்கள் இருப்பதால் குண்டர் சட்டத்தை உடைத்துக்கொண்டு வெளியில் வந்து, மீண்டும் தொழிலை நடத்துகிறார்.
இந்நிலையில் மே 17ந்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவுப்படி, வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் நள்ளிரவு மகேஸ்வரி வீட்டை ரெய்டு செய்தனர். வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதனால் மகேஸ்வரியை கைது செய்யும்போது, என் வீட்டுக்குள்ள வந்து என்னையே கேள்வி கேட்கிறீங்களா என மகேஸ்வரி சண்டை பிடிக்க, சாராய கும்பல் பெண் காவலர் சூர்யா மீது தாக்குதல் நடத்தினர், சக போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனை தொடர்ந்து மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன், காவியா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
![21kg of cannabis, Rs 20 lakh cash seized](http://image.nakkheeran.in/cdn/farfuture/kYylOJ76CLYQ56E3zn92ytKk-U-rna1V5XASphslxNU/1589894776/sites/default/files/inline-images/IMG-20200519-WA0004.jpg)
இதுபற்றிய தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்க்கு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மே 19ந்தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, சிகிச்சை பெற்றுவரும் காவலர் சூர்யாவை சந்தித்து ஆறுதல் கூறி பழங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மகேஸ்வரி கஞ்சா தொழில் செய்து பெருமளவு பணம் சம்பாதித்து இருப்பது தெரிய வந்ததுள்ளது. அதன் மூலம் நிறைய சொத்துகள் வாங்கி உள்ளார். கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த சொத்துகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது வரையில் சுமார் 40 அசையா சொத்துகளின் ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுக்கு உரிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.