அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 20-8-2018 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில்தான், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, 7 மாத இடைவெளியில் தற்போது அ.தி.மு.க. செயற்குழு மீண்டும் கூட்டப்பட்டுள்ளது.