பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக 2 ஆயிரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரையில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் படகுகள் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளன. இவைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தடையை மீறிச் சுருக்குமடி வலை, அதிக திறன்கொண்ட விசைபடகுகளை கொண்டு மீன் பிடிப்பதை கண்டித்தும் கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மாநிலம் வீரமாபட்டனம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடியுடன் சுருக்கு மடி வலையைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவாகப் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் தடை செய்யப்பட்ட வலைகள் தடை செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கிருஷ்ணன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், மீனவளத்துறை உதவி இயக்குநர் சுப்பரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 5 நாட்களில் சுருக்குமடி வலை, அதிகதிறன் கொண்ட விசைபடகு உள்ளிட்டவைகளை முற்றிலும் தடைசெய்யப்படும் என்று உறுதி கூறினார்கள். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மாலை 3 மணிக்கு மேல் கலைந்து சென்றனர். சாமியார்பேட்டை கடற்கரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.