சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை எனத் தீர்ப்பு விதிக்கப்பட்ட வாலிபர்களில் 2 பேர் நீதிமன்ற மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியை அடுத்த திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பசுபதி (22). இவரது நண்பர்கள் வரதராஜன் (23), திருப்பதி (24). இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை ‘‘பாடப் புத்தகம் கொண்டு வா’’ என்று கூறியுள்ளனர். இதை நம்பி சிறுமி வீட்டுக்குள் சென்றபோது 3 பேரும் பின் தொடர்ந்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (11-01-24) நீதிபதி ஸ்ரீவக்சன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவக்சன், குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும், அதனைக் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி ஸ்ரீவக்சன் தீர்ப்பை வாசித்ததும் நீதிமன்ற அறைக்குள்ளேயே 3 பேரும் கதறி அழுதனர். அதில் பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும் நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் அவர்களுக்கு கை, கால்கள் முறிந்தது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார், கீழே விழுந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நேற்று நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.