தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 500 ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்தநிலையில் கடலூரில் சாலைக்கரை பகுதியில் ஒரு கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கு மக்கள் கூட்டம் படை எடுத்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கிலோ இருபது ரூபாய்க்கு தக்காளியை வாங்கி சென்றனர். அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற கடைகளில் 40 ரூபாய்க்கு கிலோ தக்காளி கொடுக்கப்பட்ட நிலையில் கோலாரில் இருந்து வரவழைக்கப்பட்டு கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பதாக கடை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.