திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் சரணாலயம் கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று(4.1.2025) அதிகாலை கருணை இல்லம் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே சென்று பார்த்த போது இரு பெண் குழந்தைகள் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, கருணை இல்லம் நிர்வாகி டேவிட் சுபாஷ்க்கு தகவல் தெரிவித்தனர்.
டேவிட் சுபாஷ், சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் இரு பெண் குழந்தைகளை மீட்டுப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீஸார் அங்குள்ள சிசி டிவி பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் 2 பெண் குழந்தைகளை விட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. குழந்தைகளின் அருகே ஒரு பையும் கிடந்துள்ளது. அந்த பையில், ஜோதி என்ற பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகம், பான கார்டு, பிஸ்கெட்கள், குழந்தைகளின் துணிகள் மற்றும் ஒரு துண்டு சீட்டில் ஒரு செல்போன் எண் எழுதி இருந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, அது குழந்தைகளின் என்பவரது செல்போன் எண் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் அவரிடம் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் குழந்தைகளின் தந்தை ராஜேஷ் மற்றும் பாட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 2 வயது பெண் குழந்தை பூர்த்தி வந்தனா, 11 மாத பெண் குழந்தை பிருந்தா என்பது தெரியவந்தது. நேற்று(3.1.2025) பிற்பகல் முதல் தன் மனைவி ஜோதி மற்றும் 2 பெண் குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களை தேடி வந்ததும் தெரியவந்தது.
குழந்தைகளின் தாய் ஜோதி எங்கே போனார்? 2 பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.