![+2 BOARD EXAMS REPORT SUBMIT FOR TN MINISTER](http://image.nakkheeran.in/cdn/farfuture/TRUhqU8Y2XdIjZLz0SpG1B6P1T8zJzx8UBJ4M4spFsA/1622896955/sites/default/files/inline-images/MKS4333%20%281%29_23.jpg)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது அவர்கள் கூறிய கருத்துகள், மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகள் ஆகியவை அறிக்கையாக தயார் செய்யப்பட்டன.
அதேபோல், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (05/06/2021) 13 கட்சிப் பிரதிநிதிகளுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளும் அறிக்கையில் சேர்க்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது நேரில் சமர்ப்பித்தார். இதனால் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை முதல்வர் ஓரிரு நாளில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் முடிவு எடுப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்தியாவில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் மாநில கல்வி பாடத்திட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.