
திருச்சி மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ள ரவுடிகள், பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் உள்ளிட்டோரை கைதுசெய்ய மாநகரக் காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 6 நாட்களாக ரவுடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த ரவுடிகளையும் தேடினார்கள்.
இதன் பலனாக ரமேஷ், விஜயபாபு, நவநீதகிருஷ்ணன், விமல், இருளாண்டி யுவராஜ், லியோ ரொனால்ட், ராகேஷ், வின்சி உள்ளிட்ட 73 ரவுடிகள் கடந்த 5 நாட்களில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், நான்கு ரவுடிகள் நேற்று (22.09.2021) கைது செய்யப்பட்டனர். மேலும், கடந்த ஆறு நாட்களில் மட்டும் 152 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிற ரவுடிகளையும் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜாமீனில் வெளி வராமல் இருக்க, அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.