சேலத்தில், நகைக்கடை காசாளர் ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்கு அழைத்துச்சென்றதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள், அவருடைய வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகை, வெள்ளி பொருள்களை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அரிசிபாளையம் சுளுக்குப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (33). தனியார் நகைக்கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யலட்சுமி (30). இவர்களுக்கு ஷிவானி (4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
திவ்யலட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை கவனித்துக்கொள்ள தாயார் ரேவதி வீட்டில் இருந்தார். நேற்று இரவு (ஜூலை 3) ரமேஷ், குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று (ஜூலை 4) அதிகாலை 2.30 மணியளவில் திவ்யலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக ரமேஷ், ஒரு வாடகை காரை வரவழைத்து அதில் தனது மனைவி, மாமியாரை அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க வாயில் கதவை மட்டும் பூட்டிவிட்டுச் சென்றார்.
ரமேஷ், மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அதிகாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், பிரசவ செலவுகளுக்காக வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடயங்களை சேகரித்தனர். பீரோவில் பதிவாகி இருந்த சில விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதியில் நடமாடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.