ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக வந்த ரயிலில் மர்ம நபர்கள் கடத்தி வந்த 15 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஆந்திராவில் இருந்து வரும் விஜயவாடா, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட ஊர்களின் வழியாக வரும் அனைத்து ரயில்களையும் சேலம் ரயில்வே மற்றும் ஆர்.பி.எப். காவல்துறையினர் சோதனை செய்வதை தீவிரமாக்கி உள்ளனர்.
இந்த நிலையில், சேலம் வழியாக நேற்று முன்தினம் அதிகாலை (ஜன. 10) சென்ற தன்பாத் & ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்: 13351) ரயில்வே காவல்துறை எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையில் காவலர்கள் சோதனை நடத்தினர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் ஏறிய காவல்துறையினர், சேலம் வரும் வரை, ஒவ்வொரு பெட்டியாக பயணிகளிடமும், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை நடத்தினர். டி3 ரயில்பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கருப்பு நிறத்தில் மூன்று பைகள் இருந்தன. அந்தப் பைகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் 15 பொட்டலங்களில் தலா 1 கிலோ வீதம் மொத்தம் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் அந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா பைகளைக் கொண்டு வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.