சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டது. கரோனாவால் உயிரிழந்த 450 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ''மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்தான். தமிழர்களின் மொழி, அடையாளம் பெருமை மிக்கது. சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதி எனும் பதவியை அடைய பகுதி, இனம்,மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக்கூடாது. சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது குறித்து சக நீதிபதிகளுடன் ஆலோசிக்கப்படும்'' என்றார்.