கிருஷ்ணகிரி அருகே, பகுதி நேர வேலை மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, வாலிபரிடம் நூதன முறையில் 14.73 லட்சம் ரூபாய் பறித்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ராம முதலியார். இவருடைய மகன் குமார் (வயது 20). கடந்த மார்ச் மாதம் 10- ஆம் தேதி, குமாரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் மாதம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அதில் கூறப்பட்டு இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு குமார் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர்கள், பகுதி நேர வேலையை வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் டேட்டா என்ட்ரி ஆர்டர்கள் பெற்றுத் தரப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த ஆர்டர்களைப் பெற முதலில் காப்புத்தொகை செலுத்த வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை விட்டு வெளியேறும்போது அத்தொகை திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து குமார், சில தவணைகளில் 14.73 லட்சம் ரூபாயை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பகுதி நேர வேலைக்கான ஆர்டர்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
சந்தேகத்தின் பேரில் மீண்டும் அதே செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த குமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.