விழுப்புரம் தாலுகா பட்டானூர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல். இவருடைய மனைவி ஏஞ்சல் ராணி, இவருடைய மாமியார் பக்கிய சீலி. இவர்கள் இருவரும் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து வந்துள்ளது.
ஏஞ்சல் ராணி ஓட்டிவந்த மொபட் மீது மர்ம நபர்கள் தங்கள் பைக்கை லேசாக மோதியுள்ளனர் அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஏஞ்சல் ராணி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், பாக்கியசீலி அணிந்திருந்த 9 பவுன் தாலி செயினையும் பறித்துக்கொண்டு பைக்கில் பறந்துசென்றுவிட்டானர்.
கீழே விழுந்ததில் காயம் அடைந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் ஏஞ்சல் ராணி கொடுத்த புகாரின்பேரில் ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் செயின் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்துவருவது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.