மனிதனின் வயிற்றுப் பசியை போக்கி பட்டினியை இல்லாமல் செய்ய ஒவ்வொரு விவசாயியும் சேற்றில் இறங்கி உழுது, நடவு நட்டு, பூச்சி, இயற்கை சீற்றங்களில் பாதுகாத்து வியர்வைத் துளிகளை நெல்மணிகளாக கொடுக்கிறார்கள். இத்தனை உழைப்பிற்கு பின்னால் வரும் நெல் மணிகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொடுக்கும் போது ஒரு மூடைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்து பல நாட்கள் காத்திருந்து பணம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். இதனை சாதகமாக பயன்படுத்தும் தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளின் வயல்களுக்கே சென்று குறைந்த விலைக்கு வாங்கி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்கும் சம்பவங்களும் உண்டு.
கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை வட்ட அளவிலான பாதுகாப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாத்து அரிசி அறவைக்கும் மார்டன் ரைஸ் மில்களுக்கும் அனுப்பும் பணியை செய்ய அதிகாரிகள் குழுவே உள்ளது. இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை திறந்தவெளி குடோன்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதுகாப்பின்றி வைத்து, மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூடைகள் நனைந்து நாசமாகி, பல லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.
இந்த வகையில் தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் தொகுதியில் உள்ள திருமயம் தாலுகா வட்டக்கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 4507 மூடைகள் அதாவது ரூ.40 லட்சம் மதிப்புள்ள 126 டன் நெல் மணிகள் மழையில் நனைந்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனது. இந்த சம்பவத்தில் கிடங்கு பாதுகாப்பு அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மழையில் நனைந்து மக்கி மண்ணோடு மண்ணான மனிதர்கள் பயன்படுத்த தகுதியற்ற 4,507 இந்த நெல் மூட்டைகளை மண்ணோடு மண்ணாக பாதுகாப்பு குடோனில் அள்ளி குவித்து வைத்து அதனை தனியார் வியாபாரிகளுக்கு கால்நடை தீவனங்களுக்கு விற்பனை செய்ய டெண்டர் அறிவித்திருந்த நிலையில், நேற்று நவம்பர் 20 ந் தேதி டெண்டர் கடைசி நாள் இன்று 21 ந் தேதி டெண்டர் திறப்பு நாள். ஆனால் ஒருவர் ஒரு வியாபாரி கூட டெண்டர் எடுக்க முன்வரவில்லை.
விவசாயிகளின் வியர்வை துளியில் விளைந்து அதிகாரிகள் அலட்சியத்தால் மண்ணாகிப் போன நெல் மணிகளை குப்பையாக்கி அரசு பணத்தை விரயமாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை என்னவோ? தனியார் மில் நிர்வாகங்களை அணுகும் அதிகாரிகள் கொஞ்சமாவது டெண்டர் எடுங்கள். அரசுக்கு கணக்கு காட்டணும், பிறகு நல்ல நெல் அறவைக்கு வரும் போது ஈடுசெய்கிறோம் என்று கெஞ்சி வருகிறார்களாம். ஆனால் மில் நிர்வாகத்தினரோ மண்ணை அள்ளிப் போய் நாங்க என்ன செய்றது என்கிறார்களாம். இதனால் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் திணறி வருகின்றனர். அரசுக்கு கணக்கு காட்ட குடோன்களில் அள்ளி குவித்து வைத்துள்ள மக்கிய நெல்மணிகளை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கின்றனர் மாவட்ட அதிகாரிகள்.
விவசாயிகளிடம் ஈரப்பதம், கமிஷன் என்று கறார் காட்டும் அதிகாரிகள், இப்பொழுது இவ்வளவு மூடைகளை வீணாக்கி உள்ளதை ஏற்க முடியாது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது தொகுதியில் நடந்த அவலத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.