![1.24 lakh rupees seized without documents; Election Flying Action!](http://image.nakkheeran.in/cdn/farfuture/HWiq936U1kLXKQoPvIwUTB_Q9jG-hrHlSjiBPSuhtSA/1614736196/sites/default/files/inline-images/68658658.jpg)
புதுச்சத்திரம் அருகே, அரிசி வியாபாரி ஒருவர் மினி ஆட்டோவில், உரிய ஆவணங்களின்றி, கொண்டு சென்ற 1.24 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, தனி நபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேலான தொகையைக் கொண்டு செல்வோர், அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்.
நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் ரொக்கமோ அல்லது அதற்கு மேலான பரிசுப் பொருட்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களையோ கொண்டு செல்வது தெரிய வந்தால், அவை உடனடியாக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 2) நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே முனிசாவடியில் உள்ள ஆவுடையப்பன் கோயில் பகுதியில், தோட்டக்கலைத்துறை அலுவலர் ராஜவேல் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மினி ஆட்டோ வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 1.24 லட்சம் ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரிய வந்தது. விசாரணையில், அந்த வாகனத்தில் வந்தவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த சிலம்பரசன் (26) என்பது தெரிய வந்தது. அவர், ராமநாதபுரத்திற்கு அரிசி வியாபாரத்திற்காக சென்றுவிட்டுத் திரும்பியபோது, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் சிக்கியதும் தெரிந்தது. அவர் கொண்டு சென்ற 1.24 லட்சம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறை விசாரணையும் நடந்து வருகிறது.