பொருளாதர, உளவியல் காரணங்களைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது.., "கரோனா நோய்த்தொற்றால் கடந்த 53 நாட்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 2019- 20 ஆம் கல்வியாண்டில் கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. அதேபோன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கரோனா ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து, வருவாய் இழந்து, வாழ்வாதாரம் இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வாழ வழியின்றி, தொழிலின்றி, வேறு வழியில்லாமல் குடியிருந்து வந்த இடத்திலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசும் நிறுத்தி வைத்துள்ள இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தேர்வுகள் தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்காத நிலையில், ஊரடங்கால் வெளியூர்களுக்குச் சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப இயலாத நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவது என்பது முற்றிலும் பொருத்தமற்றதாகும். அதிலும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி தேர்வு எழுதுவது என்பதும் சரியானதல்ல. கொடிய நோய்த்தொற்றை விலைகொடுத்து வாங்குவதாகவும் அது அமைந்துவிடும்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் சுமார் 12 லட்சம் மாணவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அந்தக் குழந்தைகள் தற்போது பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லாத நிலையில் அவர்கள் மீது திடீரென பொதுத்தேர்வைத் திணிப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது ஒரு மாணவன் தனது வாழ்நாளில் சந்திக்கும் முதல் அரசு பொதுத்தேர்வாகும். பொதுவாக ஆண்டுதோறும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு ஜனவரி மாதம் தொடங்கி மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு, இரண்டாம் திருப்புதல் தேர்வு, இறுதித் திருப்புதல் தேர்வு எனப் பல கட்டத் தேர்வுகள் நடத்தி அவர்களை பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மன நிலைக்குக் கொண்டுவருவது வழக்கம்.
ஆனால், தற்போது கரோனாவின் பாதிப்பு ஒரு பக்கம், அதே நேரத்தில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களைப் பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட சூழல் ஒரு பக்கம், இத்தகைய இக்கட்டான சூழலில் மாணவர்களது மனநிலை என்பது பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்பதைத் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியறிவு அதிகம் இல்லாதவர்கள். தங்கள் குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு கல்வி ரீதியாக எவ்விதத்திலும் உதவ இயலாத நிலையில் உள்ளவர்கள். எனவே, பெரும்பாலான பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் நினைவூட்டுவதற்குக் கூட வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.
எனவே, தமிழக அரசு ஊரடங்கு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கிய பின்பு, கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு, மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் குறைந்தது 15 நாட்களாவது மீள் பயிற்சி பெற்ற பின்பே பொதுத் தேர்வை நடத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பு தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளது.