Skip to main content

மின் அளவீட்டு முறையில் விதிமீறல் இல்லை! -‘டாங்கெட்கோ’ விளக்கம்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
Tanketco's description in the High Court!

 

ஊரடங்கு காலத்தில் மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும்,  எந்த விதிமீறலும் இல்லை.  விதிகளைப் பின்பற்றியே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான  ‘பில்’லாகவும் நிர்ணயித்து,  தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில்,  தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், அதன் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் சவீதா தாக்கல் செய்த பதில் மனுவில், வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்திய வாடிக்கையாளருக்கு, ஒரு யூனிட்டுக்கு 2.50 ரூபாயும், 100 முதல் 200 யூனிட் வரைக்கும் யூனிட்டுக்கு 2.50 ரூபாயும், 200 முதல் 500 வரை யூனிட்டுக்கு-  200 யூனிட் வரை 2.50 ரூபாயும், 201 முதல் 500 யூனிட் வரை 3 ரூபாயும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு முதல் 100 யூனிட்களுக்கு 2.50 ரூபாயும், 101 முதல் 200 வரைக்கும் 3.50 ரூபாயும், 201 – 500 வரை 4.60 ரூபாயும், 500 யூனிட்டுக்கு மேல் 6.60 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதில், அரசு மானியத்தை சேர்த்து, முதல் 100 யூனிட்டுக்கு குறைவான மின் பயனாளிகளுக்கு மின் கட்டணம் இல்லை.  101 – 200 வரை 1.50 ரூபாயும்; 200 முதல் 500-க்குள் மின் நுகர்வு வாடிக்கையாளருக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் இல்லை. அதன்பின் 101 – 200 வரையிலான யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாயும், 201 – 500 யூனிட்களுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

500 யூனிட்டுகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்  மின் நுகர்வோருக்கு,  100 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை. 101 – 200 யூனிட்களுக்கு 3.50 ரூபாயும்; 201 – 500 யூனிட்களுக்கு யூனிட்டுக்கு 4.60 ரூபாயும்; 500 யூனிட்டுக்கும் அதிகமான யூனிட்டுக்கு 6.60 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும்,  1.75 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவர்களில் ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கு ஏற்ப மின் கட்டணத்தை கணக்கிட முடியாது. வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளன.  அதன் அடிப்படையிலேயே,  தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இது விதிமீறிய செயல் அல்ல. மனுதாரர் குறிப்பிடுவது போல முந்தைய மாத மின் பயன்பாட்டு அளவின் அடிப்படையில் கணக்கிட்டால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த அவ்வப்போதைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கு எந்த அபராதமும் விதிப்பதில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசுத்தரப்பில் வாதிட அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை  வரும் 29- ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்