Skip to main content

மகளிர் தின சிறப்பு செய்தி... கிராமத்து மாணவர்களின் குரலை வளமாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை...!

Published on 07/03/2020 | Edited on 08/03/2020

கல்வித்துறையில் இன்றைய ஆசிரியர்கள் தங்கள்கடமை பாடம் நடத்துவதே என்பதை மட்டும் நினைக்காமல் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக நினைத்து அவர்களுக்குள் ஒழிந்திருக்கும் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் செய்கிறார்கள் என்றால் அதற்கான கட்டணங்களை பெற்றோர்களிடம் வசூலித்துக் கொள்வது வழக்கம். ஆனால் அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் நலனில் இன்றைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்தி மாணவர்களை தனித்துவமாக உயர்த்திக் காட்டுவது சிறப்பு. தமிழ்நாட்டில் எத்தனையோ ஆசிரியர்கள் திரைமறைவில் இதை செய்து வருகிறார்கள். அப்படியான ஆசிரியர்களை நம்பியே இன்று அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இல்லை என்றால் நடப்பு கல்வியாண்டில் மூடிய பள்ளிகளைப் போல பல மடங்கு அரசுப் பள்ளிகளை மூடி இருக்க வேண்டும். இப்படியான அரசுப் பள்ளி ஆசிரியர்களை இனம் கண்டு அரசு பாராட்டுமானால் இன்னும் உற்சாகமாக களமிறங்கி கலக்குவார்கள்.

 

Women's Day Special Article -  Government School Teacher

 



இப்படி கிராமத்து மாணவர்களின் நலனில் அக்கரையோடு பணியாற்றும் ஒரு ஆசிரியைதான் மீனா ராமநாதன். முன்னாள் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி கிராமம். 1949 ம் ஆண்டு உள்ளூர் கவுண்டர் வகையறாக்களால் கிராமத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு  உருவாக்கப்பட்டு, பிறகு நிலம் கட்டிடத்தோடு அரசாங்கத்திடம் ஒப்படைத்தாலும் இன்றும் தங்களின் பங்களிப்பை செய்து வருகிறார்கள் அந்தக் குடும்பத்தினர். தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி அத்தனையிலும் அவர்களின் பங்களிப்பு அபாரம்.

தற்போது கவரப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி 127 மாணவ, மாணவிகளுடன் செயல்படுகிறது. சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். பள்ளி தலைமைஆசிரியை விசாலாட்சி மற்றும் 5 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்தப் பள்ளிக்கென ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் எழுத்து பயிற்சியில் இந்த பள்ளி மாணவர்களை யாரும் மிஞ்ச முடியாது.

 

Women's Day Special Article -  Government School Teacher

 



அடுத்தது "சஞ்சாயிகா" சிறு சேமிப்புத் திட்டம். இன்று வரை மாணவர் சிறுசேமிப்புத் திட்டம் தொடரும் ஒரே அரசுப் பள்ளி இது மட்டுமே. காலை 20 நிமிடம் வரை மாணவர்களின் சிறுசேமிப்பு வரவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. பள்ளியைவிட்டு மாணவர்கள் வெளியே செல்லும் போது சிறுசேமிப்பு பணத்தை மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள் மாணவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவி வாங்கிய தொகை ரூ. 60 ஆயிரம் என்பது சிறப்பாக பார்க்கப்பட்டது. மாணவ பருவத்திலேயே சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளியாக உள்ளது கவரப்பட்டி. 

இப்படி பல சிறப்புகளை பள்ளி பெற்றிருந்தாலும் கூட 4 ம் வகுப்பு மாணவர்களின் குரல், உள்பட அத்தனையும் சிறப்பாக்கி தனித்துவமாக காட்டி வருகிறார் வகுப்பு ஆசிரியை மீனா ராமநாதன். இதற்கு முன்னாள் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் இருந்தது பெரிதும் உதவுகிறது. அந்த வகுப்பறையே ஒரு கலைக் கூடமாக காட்சியளிக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அத்தனை பாடங்களையும் வெறும் பாடமாக மட்டும் போதிக்காமல் பாட்டு, நாடகம், ஓவியம், நடனமாக கற்றுத் தருகிறார். திருக்குறளை ராகத்துடன் பாடி, அதற்கான பொருளையும் ராகமாகவே மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர். வரலாற்று பாடங்களை உணர்ச்சிமிக்க தோற்றங்களுடன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதால் மாணவர்களும் அந்த ஏற்ற இறக்கங்களுடன் பேசி பாடத்தில் உள்ள  வரலாற்று நாயகனாகவே மாறிவிடுகிறார்கள். 

 

Women's Day Special Article -  Government School Teacher

 



அதுமட்டும் இல்லாமல் தமிழ், ஆங்கில மொழிகளில் செய்திகளை வாசித்து, அதை பதிவு செய்து ஒலி பெருக்கி மூலம் பள்ளியில் வெளியிடும் போது அது வானொலி செய்தியாகவே மாறிவிடுகிறது. கதை, கட்டுரை அத்தனையும் அந்த மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் பாடத்தோடு கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுகிறார்கள். மண் மனக்கும் கிராமிய பாடல்களை மாணவிகள் பாட எப்படி இப்படி என கேட்கத் தோன்றும். பாரதியார் பாடல்களை கும்மியடித்து பாடி வெளிக்காட்டுகிறார்கள் மாணவர்கள். ஓவியத்தில் மற்ற படைப்புகளிலும் 4 ம் வகுப்பு மாணவர்களின் தனித்திறன் சிறப்பு. 

இத்தனையும் எப்படி என்ற நமது கேள்விகளுக்கு அந்த 31  மாணவ, மாணவிகளும் கை காட்டுவது எங்க மீனா மிஸ்ஸைத்தான். ஆண்டுவிழா நடக்கும் போது எங்க கலை நிக்ச்சிகளை காண  சுத்தியிருக்கும் எல்லா கிராம மக்களும் தவறாம வருவாங்க. ஏன்னா எங்க கலை நிகழ்ச்சிகள் அப்படி இருக்கும் அதுக்கு எங்க மீனா மேம் தான் பயிற்சி கொடுக்கிறார் என்கின்றனர் மாணவர்கள். பாடத்தை வாசிக்க கூட ஏற்றம் இறக்கம் வேணும் என்று சொல்லிக் கொடுத்திருக்காங்க என்று சொல்லிக் கொண்டே போனவர்கள் இப்ப நாங்க வீட்டுக்கு போனாலும் எங்க பாடங்களை கலைகளாக மாற்றி பேசியோ, படமாக வரைந்தோ எங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள "சின்னக்குயில்" வாட்ஸ் அப் குழுவுல பதிவேற்றுவோம். எங்க மேம் உடனே பார்த்துட்டு பாராட்டுவாங்க. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவாங்க நாங்க திருத்திக்குவோம் என்றனர்.

கிராமத்து ஏழை மாணவர்களின் குரல்களை வளமாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியை மீனா ராமநாதன், "நாம படிச்சோம் வேலை கிடைத்தது கை நிறைய சம்பளம் வாங்குறோம்னு கடமைக்கு வேலை செஞ்சுட்டு நம்ம குடும்பத்தை பார்ப்போம்னு போக எனக்கு மனம் வரல. நம்மை நம்பி வரும் அத்தனை குழந்தைகளும் சாதாரண கூலி வேலை செய்ற கிராமத்து பெற்றோர்களின் குழந்தைகள். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது என்ன நினைப்பார்கள் நாம தான் படிக்கல.. நம்ம குழந்தைகளாவது நல்ல படிச்சு இந்த டீச்சர் போல ஒரு டீச்சர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு அவர்களிடம் இருக்கும். அந்தக் கனவை அடிப்படையிலேயே தகரத்துவிடாதபடி தொடக்கப்பள்ளியில் தான் செய்ய தொடங்கனும். அவர்களின் கனவை நிறைவேற்ற என்னால் முடிந்த சிறு பயிற்சிகளை என் மாணவர்களுக்கு கொடுக்கிறேன்.

 

Women's Day Special Article -  Government School Teacher

 



வெறும் பாடம், மார்க் என்பதை கடந்து பாடத்தைக்கூட எப்படி அழகாகவும் ஆழமாகவும் மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என்று நினைத்து தான் பாடங்களை ஏற்ற இறக்கங்களோடு அதற்கான முகபாவனைகளோடு செய்து காட்டுகிறேன். அதனால் அதை மாணவர்கள் எளிமையாக பிடிக்கிறார்கள். வரலாற்று பாடங்களில் உணர்ச்சிகரமாக வாழ்ந்து காட்டுவார்கள். இதையெல்லாம் தாண்டி பொது அறிவு பற்றி, தலைவர்களைப் பற்றி, இன்றைய நாட்டு நடப்புகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதம் அவர்களாகவே செய்திகளை உருவாக்கி அதை வாசிக்கவும் செய்கிறார்கள். கலை பொருட்களை உருவாக்குவதும் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்டுகிறது. இப்படி என்னால் முடிந்த சின்ன சின்ன செயல்களால் மாணவர்கள் உற்சாகமடைகிறார்கள். மாணவர்களின் உற்சாகத்தால் அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் மகிழச்சியைக் காண முடிகிறது. இங்கிருந்து வெளியே போனாலும் எங்கள் மாணவ மாணவிகள் இங்கு கற்றுக் கொண்ட தனித்திறன்களை விட்டுவிடுவதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

வானொலியில் செய்தி வாசிப்பதைப் போல எங்கள் மாணவர்கள் செய்தி வாசிக்க வேண்டும் என்பதால் தினமும் நான் செய்திகள் வாசிப்பேன். இப்ப மாணவர்களும் மிகச் சரியாக செய்தி வாசிப்பார்கள். வீட்டுக்கு போனாலும் அவர்களின் கல்வி பணி ஒரு பக்கம் தொடர்கிறது. எல்லாம் என் குழந்தைகள் தான். என் முயற்சிகளுக்கு எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவரின் ஒத்துழைப்பும் மாணவர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பும் சிறப்பாக உள்ளது. அதைவிட பள்ளியின் வளர்ச்சிக்காக உழைக்கும் கிராம நல்லவர்களின் ஒத்துழைப்பும் நன்றாக உள்ளது" என்றார் நெகிழ்ச்சியாக.

இது போன்ற ஆசிரியர்களை இனம் கண்டு உற்சாகப்படுத்தினால், மேலும் பல ஆசிரியர்களை உருவாக்க முடியும்.

 

சார்ந்த செய்திகள்